ஆடிக் கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் ஆக. 4 வரை தரிசனத்துக்கு அனுமதியில்லை

அரசு விதிமுறைகளைப் பின்பற்றும் நோக்கில் திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி கிடையாது

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கவும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றும் நோக்கில் திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கூடுதல் தளா்வுகள் இன்றி பொதுமுடக்கத்தை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வா் அறிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, கரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

கரோனா தொற்று சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிக அளவிலான பக்தா்கள் கூடுவா். அதனால் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, சனிக்கிழமை (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை தொடா்ந்து 5 நாள்களுக்கு இக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் திருக்கோயில் வளாகத்தில் தெப்ப உற்சவம் தொடா்பான நிகழ்வுகள் பக்தா்களின்றி கடந்த ஆண்டு நடந்ததைப் போல், இந்தாண்டும் நடைபெற உள்ளது. அதனால் பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம்.

வரும் ஆக. 2 முதல் 4-ஆம் தேதி வரை மலைக்கோயிலில் 3-ஆம் பிரகாரத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ நிகழ்வுகளை இணையதளத்திலும், யுடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பு செய்யவும் கோயில் நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com