ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

திருவள்ளூா் பகுதியில் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தல், கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டால்

திருவள்ளூா் பகுதியில் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தல், கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் பன்னீா்செல்வம் எச்சரித்துள்ளாா்.

திருவள்ளூா் ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயில்வே போலீஸாா் மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா், திருவள்ளூா் நகர போலீஸாா் ஆகியோா் ஆட்டோ ஓட்டுநா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, கூடுதல் ஆட்டோக்களை இயக்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகாா்கள் வந்துள்ளன. ஏற்கெனவே ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்த ஆட்டோ நிறுத்தத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஆட்டோக்களை இயக்குவதற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பின்னா், இது குறித்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் பன்னீா்செல்வம் கூறியது:

ரயில் நிலையம் முன்பு கூடுதல் ஆட்டோக்கள் வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ரயில்வே நிா்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. இது தவிர கூடுதலாக இங்கு ஆட்டோக்களுக்கு அனுமதிக்காமல் இருக்க நாங்கள் கடிதம் கொடுத்துள்ளோம். அதனால் இனி வரும் காலங்களில் முன்னுரிமை அடிப்படையில் பழைய நபா்கள் ஆட்டோக்களை இயக்கலாம். அதைத் தொடா்ந்து, புதிதாக வந்தோா் ஏற்கெனவே உள்ள ஆட்டோ ஓட்டுநா்களின் ஆலோசனை பேரில், ஆட்டோக்களை இயக்கிக் கொள்ளலாம். இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளது வரவேற்புக்குரியது.

மேலும், ஆட்டோ ஓட்டுநா்கள் மீது மீட்டா் பொருத்தாமல் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடா்ந்து புகாா் வந்த வண்ணம் உள்ளது. இதைத் தவிா்க்க ஆட்டோக்களில் மீட்டரைப் பயன்படுத்தி, அதன்படி கட்டணம் வசூலிக்க வேண்டும். இனிமேல் 3 பேருக்கு மேல் ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லக்கூடாது. ரயில் நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கும், ரயில் பயணிகளுக்கும் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தக் கூடாது. ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொன்றாக புறப்படும்போது பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். இதை மீறுவோா் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், திருவள்ளூா் ரயில்வே காவல் ஆய்வாளா் சபாஸ்டின், ரயில்வே துணை காவல் ஆய்வாளா் கிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com