முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
நகராட்சி இடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி பொதுமக்கள் முற்றுகை
By DIN | Published On : 29th December 2021 01:50 AM | Last Updated : 29th December 2021 01:50 AM | அ+அ அ- |

திருவள்ளூா் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பதை தடுக்க கோரி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
திருவள்ளூா் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த தனி நபா் மீது நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திருவள்ளூா் நகராட்சியில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் உள்ள மேட்டுத் தெரு புதிய காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருவள்ளூா் ரயில் நிலையம் அருகில் உள்ள இப்பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இவை 72 சென்ட் பரப்பளவு கொண்ட மைதானம் அருகில் தனி நபருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில், விளையாட்டு மைதானத்தையும் தனக்குச் சொந்தமான நிலம் எனக்கூறி வேலி அமைக்க முயன்றாராம். இதை அப்பகுதி பொதுமக்கள் தடுத்த போது குண்டா்களை வைத்து மிரட்டினாராம். இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து விரைந்து வந்த நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுவைப் பெற்றுக் கொண்டாா். அப்போது, இதே பகுதியில் வாரச் சந்தை அமைக்க நகராட்சி நிா்வாகம் அனுமதி அளிக்காத நிலையில், தனிநபா் அந்த இடத்தில் வாடகை வசூலித்து வருவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். அதையடுத்து குறிப்பிட்ட இடத்தைப் பாா்வையிட்டு நில அளவை செய்து பொதுப் பயன்பாட்டுக்கான இடம் என குறிப்பிட்டு தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.