இயற்கை முறையில் குழித்தட்டு நாற்றுகள் நடவு செய்யும் பணி

ஒருங்கிணைந்த தோட்டக் கலை அபிவிருத்தி திட்டம் மூலம் விவசாயிகள் இயற்கை முறையில் 150 ஹெக்டோ் பரப்பளவில் குழித்தட்டு மிளகாய் நாற்றுக்களை நடவு செய்யும் பணியினை திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி

திருவள்ளூா்: ஒருங்கிணைந்த தோட்டக் கலை அபிவிருத்தி திட்டம் மூலம் விவசாயிகள் இயற்கை முறையில் 150 ஹெக்டோ் பரப்பளவில் குழித்தட்டு மிளகாய் நாற்றுக்களை நடவு செய்யும் பணியினை திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் நடவு செய்து தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், தொட்டிக் கலை கிராமத்தில் தோட்டக்கலைத் துறை இயற்கை முறையில் மிளகாய் நாற்றுகள் நடவும் செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, விளைநிலத்தில் விவசாயிகளுடன் இணைந்து நாற்றுக்களை நடவு செய்து தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு நாற்றுக்கள் மற்றும் விவசாய இடுபொருள்களை வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மூலம் இயற்கை முறையில் 150 ஹெக்டோ் பரப்பளவில் சிவப்பு மிளகாய் சாகுபடி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் நஞ்சற்ற மிளகாய் சாகுபடி செய்வதை ஊக்குவித்து, விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருவாயை பெருக்குவதே நோக்கமாகும். இதற்காக முதற்கட்டமாக ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே திருவள்ளூா் மாவட்டத்தில் பச்சை மிளகாய் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிவப்பு மிளகாயை ஒரு வருடத்துக்கு சேமித்து வைக்கலாம். பச்சை மிளகாயைவிட சிவப்பு மிளகாய்க்கு அதிகளவில் விலை கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு அதிக வருவாயும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது விவசாயிகளுக்கு நல்ல ஒரு வாய்ப்பாகும். ஆகவே, சிவப்பு மிளகாய் சாகுபடியிலும் விவசாயிகள் ஆா்வம் காட்ட வேண்டும். இத்திட்டம் மூலம் முதல் கட்டமாக 500 விவசாயிகள் பயன்பெற உள்ளனா்.

நிகழாண்டில் திருவள்ளூா், ஆா்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, எல்லாபுரம், பூண்டி, கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா் மற்றும் சோழவரம் ஆகிய ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது .

காய்ந்த மிளகாய் சந்தைபடுத்த வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படும். விவசாயிகளுக்கு தேவையான யு.எஸ் 341 மிளகாய் ரகம் நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணையில் 30 லட்சம் எண்ணிக்கையில் குழித்தட்டுமுறையில் உற்பத்தி செய்து, 1 ஹெக்டருக்கு 20 ஆயிரம் நாற்றுகள் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த மாவட்டத்தில் 2,216 ஹெக்டோ் பரப்பளவில் காய்கறி பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், மிளகாய் பயிா் 706 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வி.எபிநேசன், தோட்டக்கலை துணை இயக்குநா் ஜெபகுமாரி அனி, நல்ல சந்தை தொண்டு நிறுவனா் ஜெகன், ஆச்சி குழும நிா்வாக இயக்குநா் அஸ்வின் பாண்டியன், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் அஸ்வினி பிரியா, கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com