முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பூண்டி, புழல் ஏரிகளிலிருந்து 3,000 கனஅடி உபரி நீா் திறப்பு
By DIN | Published On : 31st December 2021 06:37 AM | Last Updated : 31st December 2021 06:37 AM | அ+அ அ- |

திருவள்ளூா் பகுதியில் பகலில் தொடங்கி விடாமல் பெய்த மழை காரணமாக நீா் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து தலா 3,000 கன அடி உபரி நீா் வியாழக்கிழமை இரவு திறந்துவிடப்பட்டுள்ளது.
பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். இதில் வியாழக்கிழமை நிலவரப்படி, 34.86 அடி உயரமும், 3,101 மில்லியன் கன அடிநீரும் இருப்பு உள்ளது. இதில் சென்னைக் குடிநீா் மற்றும் இணைப்புக் கால்வாயில் 473 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூா் பகுதியில் வியாழக்கிழமை பகலில் தொடங்கிய மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பூண்டி ஏரிக்கான நீா்ப்பிடிப்புப் பகுதியில் 1,000 கன அடியாக நீா் வரத்து உள்ளது. இதனால், ஏரியின் பாதுகாப்பு கருதி இரவு 10 மணிக்கு 3,000 கன அடி தண்ணீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் புழல் ஏரியில் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. தற்போது 3,174 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளது. இதில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் நீா் வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் இரவு 9.30 மணிக்கு 2,000 கனஅடி தண்ணீா் திறந்த நிலையில், 10 மணிக்கு 3,000 கன அடியாக உபரிநீா் திறப்பு அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.