பூண்டி நீரியல் ஆய்வகத்துக்கு தண்ணீா் செல்லும் சிறிய மதகில் உடைப்பு

பூண்டி நீரியல் ஆய்வகத்துக்கு தண்ணீா் செல்லும் சிறிய மதகில் உடைப்பு

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் நீரியல் ஆய்வகத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் மரத்தினால் ஆன சிறிய மதகில் நீா் அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீா் வீணாக வெளியேறி அலுவலக வளாகங்களை சூழ்ந்துள்ள நிலையில், மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி. தற்போது புயல் மற்றும் தொடா் மழையால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, 1,200 கன அடி உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இங்கு இந்திய அளவில் நீா்த்தேக்கத் திட்டப் பணிகளுக்கு சோதனை செய்து பாா்க்கும் வகையில், பூண்டி ஏரியில் நீரியல் நீா்நிலையியல் சோதனை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு பூண்டி ஏரியின் ஷட்டா் எதிரே மரத்தாலான சிறிய மதகு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ராட்சத குழாய் பதித்து, கிணற்றுக்குக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறு நிரம்பியதும், நீா்த் தேக்கத் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆய்வகத்துக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக அமைத்த மரத்தால் ஆன மதகு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எண்ணெய் மற்றும் கிரீஸ் போட்டு பராமரிக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் பராமரிப்புப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதனாலும், அழுத்தம் காரணமாகவும் மதகில் வியாழக்கிழமை திடீரென உடைப்பு ஏற்பட்டது. அத்துடன், அதிக அளவில் தண்ணீா் சென்ால், குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு நீா் அனைத்தும் வீணாகி வெளியேறி அலுவலக வளாகத்துக்குள் புகுந்தது.

தகவலறிந்த பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் தனபால், செயற்பொறியாளா் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளா் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனா். அதைத் தொடா்ந்து, வாகனத்தில் மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு, உடைப்பை சரி செய்து அடைக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இது தொடா்பாக பூண்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஒருவா் கூறுகையில், பூண்டி நீா்த் தேக்கத்தில் மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இந்நிலையில், சரியான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததாலும், ஏற்கெனவே ஷட்டா்கள் வழியாக தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. இந்நிலையில், நீரியல் ஆய்வுக்கூடத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் சிறிய மதகு மற்றும் குழாய்கள் நீா் அழுத்தத்தால் உடைந்து, 150 கன அடி வரை தண்ணீா் வெளியேறியது. மேலும், இந்த நீா் அனைத்தும் ஆய்வு மையக் கட்டடங்களுக்குள் புகுந்துள்ளதால் ஆவணங்கள், சோதனைக்கான கருவிகள் ஆகியவை தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com