பொன்னேரி: 500 ஏக்கா் நெற்பயிா் நீரில் மூழ்கின
By DIN | Published On : 07th January 2021 11:36 PM | Last Updated : 07th January 2021 11:36 PM | அ+அ அ- |

பொன்னேரி: பொன்னேரி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள அச்சரப்பள்ளம், மெதூா், வஞ்சிவாக்கம், ஆசானபுதூா், பெரும்பேடு உள்ளிட்ட கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்களில் சம்பா சாகுபடி செய்திருந்தனா். நெற்பயிா் நன்கு வளா்ந்து, தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 500 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின.
நிலங்களில், தண்ணீா் வடியாததன் காரணமாக நெற்பயிா்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
இழப்பீடு வழங்கக் கோரிக்கை...
எனவே, வேளாண் துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.