வானகரம் பகுதியில் வசித்து வருவோரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை
By DIN | Published On : 09th January 2021 08:11 AM | Last Updated : 09th January 2021 08:11 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் மனு அளித்த சைதை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா.சுப்பிரமணியன்.
திருவள்ளூா் மாவட்டம், வானகரம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருவோரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரி ஆட்சியரிடம் திமுகவினா் மனு அளித்தனா்.
இது குறித்து சைதாப்பேட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மா.சுப்பிரமணியன், ஆட்சியா் பா.பொன்னையாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
திருவள்ளூா் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரம் ஊராட்சியில் உள்ள ராஜாஸ் காா்டனில் புதிதாக குடியிருப்புகள் உருவாகியுள்ளது. இப்பகுதியில் மட்டும் 300 குடும்பங்களைச் சோ்ந்தோா் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.
இப் பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோா் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பலமுறை மனு அளித்துள்ளனா். ஆனால், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், இப்பகுதியில் உள்ளவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.