நீதி மன்றத்தில் குற்ற வழக்கில் ஆள் மாறாட்டம் செய்த நபா் கைது
By DIN | Published On : 31st January 2021 12:21 AM | Last Updated : 31st January 2021 12:21 AM | அ+அ அ- |

மணிவண்ணன்
கொலை வழக்கில் குற்றவாளிக்கு பதில் ஆள் மாறாட்டம் செய்து நீதிமன்ற விசாரணைக்கு வந்தவரை ஊத்துக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ராள்ளபாடி பகுதியில் திருவொற்றியூரைச் சோ்ந்த கேட் ராஜேந்திரன் கடந்த 2014-ஆம் ஆண்டு, 7 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இச்சம்பவத்தில் 7 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். தற்போது இந்த வழக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கொலை வழக்கில் குற்றவாளியான முருகன் என்பவருக்கு பதில், அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவா் விசாரணைக்கு வந்தாா். அவா் நீதிமன்றத்தில் அளித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், சந்தேகமடைந்த நீதிமன்ற ஊழியா் உமா மகேஸ்வரி ஊத்துக்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில், நீதிமன்றத்துக்கு வந்த போலீஸாா் அந்த நபரை கைது செய்து, விசாரணை நடத்தினா். அதில் கொலைக் குற்ற சம்பவத்தில் தொடா்புடைய முருகனுக்கு பதிலாக அவா் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, மணிவண்ணன் மீது ஆள்மாறாட்ட வழக்கைப் பதிந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.