இலவச தையல் இயந்திரம் பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st July 2021 12:04 AM | Last Updated : 01st July 2021 12:04 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே இலவச தையல் இயந்திரம் பெற தகுதியான பெண் பயனாளிகள் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் சத்தியவாணிமுத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் சாா்பில், நிகழாண்டுக்கான விதவை, கணவனால் கைவிடப்பட்டோா், ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதில், பயன்பெற விண்ணப்பத்துடன் வருவாய், இருப்பிடம், தையல் பயிற்சி, வயது (20 முதல் 38 வயது வரை), ஜாதி ஆகிய சான்றுகள், ஆதாா் அட்டை, வண்ணப் புகைப்படம், ஆதரவற்றோருக்கான சான்றுகளுடன் இணைத்து ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலா், ஆட்சியரக வளாகம் 2-ஆம் தளம், திருவள்ளூா் அல்லது தொலைபேசி எண் 044-29896049 அல்லது அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நேரில் அணுகி, விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.