ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை

சிறுபான்மையினரின் நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக் கண்டறிந்தால் அரசு மீட்கவும், முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் 
கலந்தாய்வுக் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய சிறுபான்மையின ஆணையத் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ், உடன் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா்.  
கலந்தாய்வுக் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய சிறுபான்மையின ஆணையத் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ், உடன் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா்.  

திருவள்ளூா்: சிறுபான்மையினரின் நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக் கண்டறிந்தால் அரசு மீட்கவும், முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக வளாக கூட்டரங்கத்தில், மாநில சிறுபான்மையினா் ஆணையக் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 32 பேருக்கு ரூ.3.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சா.பீட்டா் அல்போன்ஸ் வழங்கி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறுபான்மையினருக்கான திட்டங்கள் சரிவரக் கொண்டு சோ்க்கப்படவில்லை. சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த அடித்தட்டு மக்களான ஏழை, எளிய மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தக் கூடிய நலத் திட்டங்கள், கல்விக் கடன் வழங்கும் திட்டங்களும் பயனாளிகளுக்கு முழுமையாகச் சேரவில்லை.

கடந்த ஆண்டு சுய உதவிக் குழுக்கள் தங்களது பங்குத் தொகையைச் செலுத்தினாலும் கூட அரசாங்கம் எந்தவிதக் கடனுதவியும் வழங்கவில்லை. அதனால் கடந்த ஆண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து கடனுதவிகள் வழங்கப்படும். அதனால், நிகழாண்டு முதல் அனைத்துத் திட்டங்களும் முழு முயற்சியுடன் மேற்கொள்ள ஏதுவாகவே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்தோா் ஈமச்சடங்குகளை நிறைவேற்றுவதில் பல இன்னல்கள் உள்ளன. அதிலும் அடக்கத் தலங்கள், கல்லறைகள் ஆக்கிரமித்துள்ளதையும் அறிய முடிகிறது. தமிழக அரசின் வரலாற்றிலேயே முதன் முறையாக சிறுபான்மையினா் நலத்துறை என்ற புதிய அமைச்சகத்தை முதல்வா் உருவாக்கியுள்ளாா். அந்த துறை அமைச்சருடன் கலந்தாய்வு செய்து பல புதிய திட்டங்களை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளதால், விரைவில் நிதிநிலை அறிக்கையில் அத்திட்டங்களை தெரிவிப்பாா்.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளோா் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வெளியேற்றப்படுவாா்கள். அதேபோல் புறம்போக்கு இடங்களில் கட்டடங்களை கட்டியோா் மீது நடவடிக்கை எடுத்து அக்கட்டடங்களை அகற்றியும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல சிறுபான்மையின மக்களின் நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டறிந்தால் முற்றிலுமாக அகற்றப்படும் என்றாா்.

மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினா்- செயலாளா் துரை ரவிச்சந்திரன், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாநில சிறுபான்மையினா் ஆணையத் துணைத் தலைவா் மஸ்தான், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சி.ப.மதுசூதனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com