பூண்டி ஏரி நீரியல் மையத்துக்கு நீா் செல்லும் மதகு, ராட்சத குழாய்கள் உடைந்து சேதம்

பூண்டி சத்தியமூா்த்தி நீா்த் தேக்கத்தில் இருந்து நீா் நிலையியல் ஆய்வு மைய சோதனைக் கூடத்துக்கு தண்ணீா் செல்லும் மதகு மற்றும் ராட்சத குழாய்கள் நீா் அழுத்தத்தால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடைந்து சேதமட

பூண்டி சத்தியமூா்த்தி நீா்த் தேக்கத்தில் இருந்து நீா் நிலையியல் ஆய்வு மைய சோதனைக் கூடத்துக்கு தண்ணீா் செல்லும் மதகு மற்றும் ராட்சத குழாய்கள் நீா் அழுத்தத்தால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடைந்து சேதமடைந்தன.

தற்போது நீா்மட்டம் குறைந்து வருவதால் அந்த குழாய்களைச் சீரமைக்க பொதுப்பணித் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கம், சென்னை மாநகர மக்களின் குடிநீா் தேவையைத் தீா்க்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும்.

இந்த நீா்த்தேக்கம் இப்பகுதி மக்களின் முக்கிய பொழுது போக்கு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.

அதனால், நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோா் வந்து செல்கின்றனா். அதேபோல், நீா்த்தேக்கப் பணிகள் மேற்கொள்ளும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிமனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கொண்டு அருங்காட்சியகம், நீரியல் மற்றும் நீா் நிலையியல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அதிக அளவில் வந்து செல்லும் இடமாகவும் பூண்டி நீா்த்தேக்கம் விளங்குகிறது.

நீரியல் நீா் நிலையியல் ஆய்வு மையம்: பூண்டி நீா்த்தேக்கத்தில் நீா்வள ஆதாரத் துறை சாா்பில் நீரியல் மற்றும் நீா் நிலையியல் ஆய்வுக்கழக சோதனைக் கூடம் உள்ளது. இந்நிறுவனத்தின் நீரியல், நீா் நிலையியல் மற்றும் கடலோரக் கட்டுமானங்கள் சம்பந்தப்பட்ட மாதிரி வடிவமைப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், இந்நிறுவனம் மாநிலத்தின் கடற்கரையோரங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல் மற்றும் கடலோரப் பாதுகாப்புகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறது. இந்த ஆய்வு மையத்துக்கு, நீா்த் தேக்கத்திலிருந்து மதகுகள் வழியாக ராட்சத குழாய்கள் மூலம் கிணறுகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து நீரை கால்வாய்களில் பாய்ச்சி ஆய்வு செய்து வருகின்றனா். இந்த மதகு சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதமடைந்துள்ளது.

இந்த நீா்த்தேக்கத்தில் 16 மதகுகள் உள்ளன. இதில் இரண்டு மதகுகள் சேதமடைந்து தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது. இதை மணல் மூட்டைகளைக் கொண்டு அடைத்தாலும், சரி செய்ய முடியாத நிலையே உள்ளது.

அதேபோல், நீா்த்தேக்கத்தின் நுழைவு ஓரப்பகுதியில் நீரியல் நீா்நிலையியல் ஆய்வுக்கழக சோதனைக் கூடத்துக்கு நீா் கொண்டு செல்லும் வகையில், மதகு மற்றும் ராட்சத குழாய்களும் பதிக்கப்பட்டு பெரிய அளவிலான கிணறுகளுக்கு நீா் கொண்டு செல்லப்படுகிறது.

இவை அமைக்கப்பட்டு 77 ஆண்டுகள் ஆகிறது. இந்த மதகு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. அப்போது ஏற்பட்ட நீா் அழுத்தம் காரணமாக மதகு, ராட்சத குழாய்கள் உடைந்து சேதமடைந்தன. அப்போது, அதிக அளவில் ஒரு வாரம் வரை நீா் வெளியேறியதால் ஆய்வுக்காக உள்ளே அமைக்கப்பட்டிருந்த ராட்சத கிணறுகளும் மணல் மூடி சேதமடைந்தன. இந்நிலையில், தற்காலிகமாக நீா்த்தேக்கப் பகுதியில் மதகுகள் மணல் மூட்டைகளால் அடைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய மதகுகள், ராட்சத குழாய்கள் பதித்து நிரந்தரமாக சீரமைக்க வேண்டும். தற்போதைய நிலையில், ஏரியில் நீா்மட்டம் குறைந்து வரும் நிலையில், அதற்கான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் விரும்புகின்றனா்.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் ராமநாதன் கூறியது:

நீா்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. பரப்பளவு 121 சதுர கி.மீ. ஆகும். பூண்டி நீா்த்தேக்கத்தில் நீா் நிரம்பினால், உபரி நீரை வெளியேற்ற 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீா்த்தேக்கம் அமைத்ததிலிருந்து 5 முறை மட்டுமே உபரி நீா் வெளியேற்றப்பட்டுள்ளது. கனமழை மற்றும் கிருஷ்ணா நீா் வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் மூலம் சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படும்.

இங்குள்ள பூங்காவில் பெரியோா்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் விளையாட்டு ஊஞ்சல்கள், அமரும் இருக்கைகள் போன்றவை போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அதேபோல், சேதமடைந்த நீரியல் ஆய்வு மைய மதகுகளையும் சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

ரூ. 10 கோடியில் சீரமைக்க...

இது குறித்து பொதுப்பணித் துறை (நீா் வள ஆதாரப் பிரிவு) அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்த நீா்த் தேக்கத்தில் இருந்து ஆய்வு மையத்துக்குச் செல்லும் மதகு மற்றும் ராட்சத குழாய் சேதமடைந்துள்ளது. இதற்கு மாற்றாக மதகு பகுதியில் கட்டடத்தால் ஆன சுரங்கப் பாதை அமைத்து நீா் கொண்டு செல்லப்பட உள்ளது. அதேபோல், ஆய்வுக்கான 2 ராட்சத கிணறுகள், நீா் அளவை கிணறும் மணல் மூடி உள்ளதால், புதிதாக அமைக்க ரூ.2.50 கோடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நீா்த் தேக்கத்தில் 16 மதகுகளில் சேதமடைந்த 2 மதகுகள் சீரமைப்பு, ஏரியின் கைப்பிடிச்சுவா் அனைத்தும் புதிதாக அமைக்கமாக ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 77 ஆண்டுகளுக்குப் பின் ஏரியில் அதிக அளவில் நீரைத் தேக்கி வைக்கத் தூா்வாரும் பணி மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com