புற்றுநோய் பாதித்த அரசுப்பள்ளி மாணவியை தோளில் சுமக்கும் தாய்: உதவி கோரி கண்ணீர்

அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி புற்றுநோய் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற முடியாமல் வீட்டில் வலியால் துடி துடிக்கும் காட்சி காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.
புற்றுநோய் பாதித்த அரசுப்பள்ளி மாணவியை தோலில் சுமக்கும் தாய்
புற்றுநோய் பாதித்த அரசுப்பள்ளி மாணவியை தோலில் சுமக்கும் தாய்

அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி புற்றுநோய் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற முடியாமல் வீட்டில் வலியால் துடி துடிக்கும் காட்சி காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.

திருத்தணி - பொதட்டூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள ராஜா தேசிய நகர் பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் ரம்ஜானி. இவரது கணவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார். இவருக்கு சுபானி (23), சான்மா(17) என இரு மகள்கள் உள்ளனர். இதில் சுபானி திருமணம் செய்துவிட்டார். சான்மா(17) திருத்தணி அரசு மகளிர் மேல் நிலைபள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் சான்மாவுக்கு கால் தொடையில் வீக்கம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். பரிசோதனையில் சான்மாவுக்கு கால் தொடையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் சான்மாவால் நடக்க முடியாமலும், உட்கார கூட முடியாமலும் போனது. இதைகண்ட தாய் என்ன செய்வது என தெரியாது, முதுகில் சான்மாவை தூக்கிக்கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் சான்மாவுக்கு புற்றுநோய் (கேன்சர்) இருப்பது தெரியவந்ததும், தாய் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் மருத்துவர்கள் இதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சிகிச்சைக்காக 15 நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு வருமாறும் அறிவுறுத்தினர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சான்மாவை சிகிச்சைக்காக அனுமதிக்க முடியாமல் போனது. இதேகாலத்தில் சான்மாவின் தாய்க்கும் வேலைவாய்ப்பில்லாததால் கடந்த 9 மாதங்களாக இருவரும் உண்ண உணவின்றி வீட்டிலேயே முடங்கினர்.

பின்னர் ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்ந்ததால் காஞ்சிபுரம் அண்ணா மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை என சான்மாவை முதுகில் தூங்கிக்கொண்டு மருத்துவமனை, மருத்துவமனையாக சென்று பரிசோதனை செய்தார் அவரது தாய்.

அதைத்தொடர்ந்து கரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வது கடினம் எனக் கூறியதால் கால் வலி குறைவதற்காக கிமு எனப்படும் ஊசியை மட்டும் போட்டு அனுப்பிவிட்டதாக வருத்தத்துடன் கூறுகிறார் தாய் ரம்ஜானி.

இந்நிலையில் சான்மாவை தாய் ரம்ஜானி தனது முதுகில் தூக்கிக்கொண்டு 10 நாட்களுக்கு ஒருமுறை சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று கிமு ஊசியைப் போட்டு வருகிறார்.

இதனிடையே வலியால் துடிக்கும் தனது மகளின் நிலை கண்டு சோகமடைந்திருக்கிறார் தாய் ராம்ஜானி. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் மற்றும் ஆசிரியர்கள் மாணவியின் வீட்டிற்கு நேரடியாக சென்று மாணவியை  பார்வையிட்டு ஆறுதல் கூறி, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவியை வழங்கினர்.

தந்தையை இழந்து, அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சான்மாவை காப்பற்ற அரசு மருத்துவனை, தனியார் மருத்துவனை மருத்துவர்கள் யாரேனும் முன்வந்து உதவ வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு ஏழை மாணவியின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

மாணவியின் உயிரை காப்பாற்ற யாரேனும் முன்வருவார்களா?..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com