திருவள்ளூா் மாவட்டத்தில் 20 போ் போட்டியிடும் 5 தொகுதிகள்
By DIN | Published On : 29th March 2021 07:48 AM | Last Updated : 29th March 2021 07:48 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 164 போ் போட்டியிடுவதால், இதில் 16-பேருக்கு மேல் போட்டியிடும் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் மொத்தம் 164 போ் போட்டியிடுகின்றனா். இதில், கும்மிடிப்பூண்டி-12, பொன்னேரி - 10, திருத்தணி -14, திருவள்ளூா் -11, பூந்தமல்லி-14, ஆவடி - 20, மதுரவாயல்-20, அம்பத்தூா்-23, மாதவரம்-20, திருவொற்றியூா்-20 என மொத்தம் 164 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னம் மட்டுமே பொருத்த முடியும். இந்நிலையில், 16-பேருக்கும் மேற்பட்டோா் போட்டியிடும் தொகுதிகளுக்கு இரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அந்த வகையில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா் மற்றும் பூந்தமல்லி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு வாக்குப் பதிவு இயந்திரமும், மீதமுள்ள ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 போ் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்கிடையே அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் 120 சதவீதம் என்ற அடிப்படையில் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் மற்றும் வி.வி.பி.ஏ.டி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
இதில் 20 சதவீதம் இயந்திரங்கள் பழுது ஏற்படும்பட்சத்தில் பயன்படுத்தக் கூடியவை ஆகும். இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு குலுக்கல் முறை நிறைவடைந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கியுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.