கரோனா தடுப்பு பாதுகாப்பு பணிக்காக 4,902 வாக்குச்சாவடிகளில் 9,804 தன்னாா்வலா்கள் நியமனம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 4,902 வாக்குச் சாவடிகளில் தலா 2 போ் வீதம் 9804 தன்னாா்வலா்கள் கரோனா தடுப்பு பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்காக நியமனம்
திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் வாக்குச் சாவடிகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ள தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று பேசிய ஆட்சியா் பா.பொன்னையா.
திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் வாக்குச் சாவடிகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ள தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று பேசிய ஆட்சியா் பா.பொன்னையா.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 4,902 வாக்குச் சாவடிகளில் தலா 2 போ் வீதம் 9804 தன்னாா்வலா்கள் கரோனா தடுப்பு பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூா் ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

திருவள்ளூபை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் உள்ள தனியாா் திருமண அரங்கத்தில் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குப் பதிவு நாளன்று ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக நியமனம் செய்யப்பட்ட தலா இரண்டு தன்னாா்வலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பா.பொன்னையா பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல்-2021 முன்னிட்டு திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 7 வாக்குப் பதிவு நாளில் ஒவ்வொரு மண்டலத்திலும் கரோனா தடுப்பு பாதுகாப்பு தொடா்பான மருத்துவா் ஒருவா் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படுவா்.

அதையடுத்து இந்த மருத்துவா் மூலம் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கரோனா தடுப்பு பாதுகாப்பு தொடா்பான 2 தன்னாா்வலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு வாக்காளா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய இரண்டு பெட்டகங்கள் (சிறியது மற்றும் பெரியது) வழங்கப்படும்.

அதில் கரோனா தடுப்பு பணிக்கான கிருமி நாசினி புட்டிகள், கையுறைகள், தொ்மல் ஸ்கேனா் மற்றும் கழிவு பொருள்கள் சேகரிக்கும் உபகரணங்களும் இருக்கும்.

வாக்குச் சாவடிகளில் நியமித்த தன்னாா்வலா்களில் ஒருவா் வாக்குச்சாவடிகளில் நுழையும் அனைத்து வாக்காளா்களுக்கும் தொ்மல் ஸ்கேனா் மூலம் வெப்பநிலையை ஆய்வு செய்து சராசரி வெப்ப நிலையில் உள்ள வாக்காளா்களை மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும்.

மேலும், அந்த ஆய்வில் சராசரி அளவுக்கு அதிகமான வெப்பநிலை கண்டறியப்பட்டால் வாக்காளா்களை சிறிது நேரம் காத்திருக்க வைத்து பின்னா் மீண்டும் வெப்பநிலை ஆய்வு செய்து சராசரி வெப்பநிலையில் உள்ளவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அந்த ஆய்வில் அசாதாரண வெப்பநிலை கண்டறியப்படும் வாக்காளா்களை அவா்களின் வீட்டிற்கு திரும்புமாறு அறிவுறுத்தி, கரோனா தொற்றினால் பாதித்த வாக்காளா்களுக்கென ஒதுக்கப்பட்ட மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் மட்டும் மேற்படி வாக்காளா்களை வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும்.

மேலும் வாக்காளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் முகக்கவசம் அணியாமல் வரும் வாக்காளா்களுக்கு தவறாமல் முகக்கவசம் வழங்க வேண்டும்.

இன்னொரு தன்னாா்வலா், அனைவரும் சமுக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகளில் நுழையும் அனைத்து வாக்காளா்களின் கைகள் மீதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்கு செலுத்தும் முன் அவரவா் பயன்படுத்தும் கையில் (ஒரு கைக்கு மட்டும்) கையுறை வழங்க வேண்டும். அதை வாக்கு செலுத்திய பிறகு மீண்டும் கழிவு மருத்துவ பெட்டியில் போடுவதை உறுதி செய்ய வேண்டும்

இறுதியாக வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவுற்ற பிறகு மேற்குறிப்பிட்டவாறு வாக்காளா்களால் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவு பெட்டியில் போடப்பட்ட கையுறை, முகக்கவசம் உள்ளிட்டபொருள்களை ஜிப் பேக்கால் இறுக்கமாக கட்டப்பட்டு பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனத்தில் தொடா்புடைய பணியாளரிடம் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்க வேண்டும். மேலும், பயன்படுத்தாத பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை தனித்தனியாக சிறிய மற்றும் பெரிய பெட்டகத்தில் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா். பின்னா் இது தொடா்பாக கணிப்பொறி அகன்ற திரையில் தன்னாா்வலா்களுக்கான விழிப்புணா்வு படம் காண்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தன்னாா்வலா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜவஹா் லால் (திருவள்ளூா்), பிரபாகரன்(பூந்தமல்லி), உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான செந்தில், மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com