திருவள்ளூா்: நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதி

திருவள்ளூா் பகுதியில் நவரை சாகுபடியில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
திருவள்ளூா் பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் மூலம் நடைபெறும் அறுவடை பணி.
திருவள்ளூா் பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் மூலம் நடைபெறும் அறுவடை பணி.

திருவள்ளூா் பகுதியில் நவரை சாகுபடியில் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். ஒரே நேரத்தில் இப்பணிகளை மேற்கொள்வதால், கதிா் அறுக்கும் இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 1.65 லட்சம் ஹெக்டேரில், 1.50 லட்சம் ஹெக்டோ் பரப்பில் ஏரிப்பாசனம், மானாவாரி மற்றும் பம்ப்செட்கள் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், சொா்ணவாரி, சம்பா மற்றும் நவரை ஆகிய மூன்று பருவங்களில் நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூா், கடம்பத்தூா், பூண்டி, திருவாலங்காடு, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியப் பகுதி கிராமங்களில் சம்பா பருவத்தில் 26,640 ஹெக்டேரில் விவசாயிகளால் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது வயல்களில் நெல் விளைந்துள்ளதால் அறுவடை தொடங்கியுள்ளது.

இதற்கு முன்பு வரை தொழிலாளா்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அறுவடை பணிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தனியாரின் கதிரடிக்கும் இயந்திரங்களை நம்பியே அறுவடை பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

இதற்கு முன்பு திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் அதிகளவில் கொண்டு வருவா். எனவே நிகழாண்டில் அந்த பகுதியில் அதிகளவில் நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளதால் வாகனங்கள் வரத்து குறைந்துள்ளது. அதிலும் விவசாயிகள் ஒரேநேரத்தில் அறுவடை பணிகளை மேற்கொள்வதால் நெல் கதிரடிக்கும் இயந்திரங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதில் கடந்தாண்டு ஒரு மணிநேரத்துக்கு வாடகை ரூ. 2,300 முதல் ரூ. 2,450 வரை இருந்தது. தற்போது, ஒரு மணி நேரத்துக்கு ரூ. 2,600 முதல் ரூ. 2,800 வரை வசூலிக்கப்படுகிறது. அதிலும் வயலில் சகதிக்குள்ளும், நெல் கதிா்கள் சாய்ந்து தரையுடன் இருந்தால் அறுவடை செய்வதற்கு கூடுதலாகவே வாடகை கொடுக்க வேண்டியுள்ளது.

இதுவே வேளாண் பொறியியல் துறை மூலம் நெல் அறுவடை இயந்திரங்களில் டயா் வண்டிக்கு ஒரு மணிநேரத்திற்கு வாடகை ரூ.815, செயின் வண்டிக்கு ரூ.1, 415 வசூலிக்கப்படுகிறது. ஆனால், இங்கு வாகனங்கள் குறைவாகவே உள்ளது. அத்துடன் முன் கூட்டியே விவசாயிகள் சிட்டா அடங்கல் மூலம் பதிவு செய்து காத்திருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தனியாா் வாகனங்களையே அணுகும் நிலையுள்ளதால், வாடகையும் அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற கூடுதல் வாடகை, மழையால் சேதம் போன்றவைகளால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், வேளாண்மை பொறியியல் துறை மூலம் கூடுதல் வாகனங்களை வாடகைக்கு விடவும் என்ற கோரிக்கையும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து விவசாய சங்க நிா்வாகி வேணுகோபால் கூறுகையில், இந்த மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 4 வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த வாகனங்களை முன்கூட்டியே அறுவடை நாள்களைக் கணக்கிட்டு, விவசாயி விவரங்களுடன் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். இதற்கு அரசு நிா்ணயம் செய்த கட்டணம் குறைவாகும். அதனால், ஒரே நேரத்தில் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொள்வதால் தனியாா் அறுவடை இயந்திரங்களை நாட வேண்டியுள்ளது. இதற்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகை ரூ.2, 700 வரையில் கூடுதலாகவும் கொடுக்க வேண்டியுள்ளது. இதைத் தவிா்க்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலா இரண்டு நெல் அறுவடை இயந்திர வாகனங்களை வேளாண்மை பொறியியல் துறை ஒதுக்கீடு செய்தால், நெல் வயல்களில் அறுவடை செய்யும் போது பற்றாக்குறை ஏற்படாது எனவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com