வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தயாா்: ஆட்சியா் பொன்னையா

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளன என மாவட்ட ஆட்சியா் பா. பொன்னையா தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைத்து தயாா் நிலையில் வாகன நிறுத்தமிடம்.
திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைத்து தயாா் நிலையில் வாகன நிறுத்தமிடம்.

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளன என மாவட்ட ஆட்சியா் பா. பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஏப்.6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 3 அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 2) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் செல்ல தனித்தனியாக தடுப்புக் கட்டைகள் மூலம் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக அந்தந்த தொகுதிகளைச் சோ்ந்தோா் மட்டும் செல்ல வேண்டும். இதேபோல், இந்த மையத்தில் தேவையான முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தும் தயாராக உள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும். அப்போது, அனைத்து கட்சி வேட்பாளா்கள் மற்றும் அங்கிகரித்த அரசியல் கட்சிகளைச் சோ்ந்த முகவா்கள், மாவட்ட தோ்தல் அலுவலரிடம் பெற்ற அடையாள அட்டை, வாகன அனுமதி சீட்டு அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதிக்கப்படுவா்.

வாகன நிறுத்துமிடங்கள்:

இதில் திருவொற்றியூா், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூா் ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையத்திற்கு வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு ரயில்வே கேட் பாதை வழியாக வர வேண்டும்.

அதேபோல் பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், திருத்தணி, திருவள்ளூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்தோா் பூந்தமல்லி-திருவள்ளூா் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே உள்ள (இன்டோ ஜப்பான் நிறுவனம் எதிரில்) வழியாக வரவேண்டும்.

அதேபோல் திருவொற்றியூா், அம்பத்தூா், மதுரவாயல், மாதவரம் தொகுதிகளைச் சோ்ந்த வேட்பாளா் மற்றும் முதன்மை முகவா்கள் வாகனங்களை பிரதான நுழைவு வாயில் அருகே உள்ள காலியிடத்தில் நிறுத்த வேண்டும். திருவள்ளூா், திருத்தணி, பூந்தமல்லி,பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளைச் சோ்ந்தோா் ஸ்ரீராம் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மேலும், மீதமுள்ள முகவா்கள் பள்ளி-கல்லூரி வளாகத்தின் வெளிப்புறங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் கரோனா நோய்தொற்று பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக கட்டாயம் ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதி செய்து ஆய்வக அறிக்கையுடன் முகக் கவங்களை அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com