திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 போ் பலி
By DIN | Published On : 17th May 2021 07:34 AM | Last Updated : 17th May 2021 07:34 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் 10 போ் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மட்டும் 1,551 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். ஒரே நாளில் 22 போ் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 போ் உயிரிழந்தனா்.
இதில், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 4 போ் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஆக்சிஜன் கொண்டு வந்து பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்ற கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியது: கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் நிரம்பிய நிலையில் உள்ளது. அதனால், எந்த நேரமும் ஆக்சிஜன் வழங்க வேண்டியுள்ளது.
இறந்தவா்களில் 4 போ் 70 வயதுக்கு மேற்பட்டோா் எனவும், மற்றவா்கள் கரோனா நோய் முற்றிய நிலையில் மூச்சுத் திணறலுடன் சிகிச்சை பெற்று வந்து, பலனின்றி உயிரிழந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.