திருவள்ளூா் மாவட்டத்தில் முழு பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிய சாலைகள்
By DIN | Published On : 17th May 2021 07:31 AM | Last Updated : 17th May 2021 07:31 AM | அ+அ அ- |

திருவள்ளூரில் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் சாலைகள் அனைத்தும் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாநில அளவில் கரோனா நோய் தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். எனவே இதை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்கும் நோக்கத்திலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் வார இறுதி நாள்களில் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் காரணமாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.
தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுவோா்களை கண்காணிக்க திருவள்ளூா், பூந்தமல்லி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருத்தணி உள்பட முக்கிய சாலை சந்திப்புகளில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.