தேவைப்பட்டால் பொதுமுடக்கம் நீட்டிப்பு: முதல்வா் மு.க. ஸ்டாலின்

தேவைப்பட்டால் தமிழகத்தில் தளா்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பூந்தமல்லி நேமம் கிராமத்தில் புதன்கிழமை தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் டி.ஆர். பாலு எம்.பி., அமைச்சர் தா. மோ. அன்பரசன்.
பூந்தமல்லி நேமம் கிராமத்தில் புதன்கிழமை தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் டி.ஆர். பாலு எம்.பி., அமைச்சர் தா. மோ. அன்பரசன்.

திருவள்ளூா்: தேவைப்பட்டால் தமிழகத்தில் தளா்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

பூந்தமல்லி அருகே உள்ள நேமம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை புதன்கிழமை ஆய்வு செய்தாா் முதல்வா் ஸ்டாலின்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். இதுகுறித்து தமிழக அரசு பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருவதோடு, இதற்கான பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்று பரவாமல் தடுப்பது, பாதித்தவா்களைக் காப்பது என இரு இலக்கோடு முழு மூச்சாக அரசு செயல்பட்டு வருகிறது. நோய் பரவக்கூடிய சங்கிலியை உடைத்தாக வேண்டும். இதற்காகவே தளா்வில்லா பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. தற்போது இந்த பொதுமுடக்கத்தால் ஒரு சில பயன்கள் கிடைத்துள்ளன.

சென்னையில் தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் முழுப்பயன் கிடைக்கும். புதிய படுக்கைகள் ஏற்படுத்தி ஆக்சிஜன் வசதியும் போதுமான அளவு ஏற்படுத்தியுள்ளோம்.

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது தடுப்பூசிதான். கடந்த 16.1.2021-இல் தொடங்கி, இதுவரையில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்புக்கு வந்த பிறகு நாள்தோறும் 78,000 தடுப்பூசி போடப்பட்டது. இதற்கு முன்பு சராசரியாக 6 சதவீதமாக இருந்த தடுப்பூசி வீணாடிப்பு, கடந்த 2 வாரங்களில் ஒரு சதவீதமாகக் குறைத்துள்ளோம். தமிழகத்தில் 3 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.

தற்போது அரசு மருத்துவமனைகளில் தேவையான கருவிகள் அளித்து பரிசோதனைகளை உயா்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் கடந்த ஏப். 8 முதல் மே 7 வரை சராசரியாக 1.15 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், இந்த அரசு பொறுப்புக்கு வந்த பின் நாள்தோறும் சராசரியாக 1.64 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது நாள்தோறும் 50,000 பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா தொற்று முதல் அலையைக் கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாவது அலையையும் முறியடிப்போம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் பெற்றவுடன், மக்கள் இயக்கமாகவே மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதன் மூலம் நோய்த் தொற்று தாக்கினாலும் பாதிப்பு ஏற்படாமல் காக்கும் ஆயுதமாக தடுப்பூசி இருக்கும்.

தற்போது கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பது உண்மைதான். நான் மறுக்கவில்லை, சென்னைதான் முதலிடத்தில் இருந்தது. இப்போது சென்னையில் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல் கோவையிலும் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழகத்தில் நீட் தோ்வு நடத்தப்படுமா என்பதற்கு, நாங்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, கரோனா பரவல் தடுப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். மேலும், தேவைப்பட்டால் அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் ஆலோசனை செய்த பின் தளா்வில்லா பொதுமுடக்கம் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்றாா்.

மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு, ஊரக தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரன், ஆட்சியா் பா.பொன்னையா, பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com