குறைந்த செலவில் நோயாளிகள் பயன்பெற ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் லீகல் ரைட் கவுன்சில் அறக்கட்டளை சார்பில் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் பயன்பெறும் வகையில், ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கி வைக்கப்பட்டு,

திருவள்ளூர்: வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் லீகல் ரைட் கவுன்சில் அறக்கட்டளை சார்பில் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் பயன்பெறும் வகையில், ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கி வைக்கப்பட்டு, மீட்டர் குறிப்பிடும் குறைந்த கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தளர்வில்லா பொது முடக்கம்  பொது போக்குவரத்து உள்பட பல்வேறு வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பவும் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  

இதைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் வாகன வசதிகள் செய்து தரும் வகையில், திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், லீகல் ரைட் கவுன்சில்-இந்தியா  அறக்கட்டளையினர் நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை அளிக்க முன்வந்தது. தற்போது, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதல் கட்டமாக 15 ஆட்டோ ஆம்புலன்ஸýகள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 

அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகம்-3, பூண்டி ஆரம்ப சுகாதார நிலையம் -3, கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம்-3, பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம்-3, வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையம்-3 என ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனங்கள் பிரித்து சேவை வழங்கப்பட்டது. 

இந்த ஆம்புலன்ஸ் ஆட்டோக்கள் மூலம் நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளைக் கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும். அதனால் நாள்தோறும் 24 மணிநேரமும்  செயல்படும்.  இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள அரசின் 1074 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெறலாம். 

இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், "தற்போது முதல் கட்டமாக   சோதனையின் அடிப்படையில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் கரோனா நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியோர்களிடம் மீட்டர் அடிப்படையில் குறைந்த கட்டணம் வசூலிக்கவும், ஏழையாக இருந்தால் பணமில்லாமல் அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' எனறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com