பூண்டி ஏரியில் நீா்மட்டம் தொடா்ந்து சரிவு

கடும் கோடை வெப்பம் காரணமாக திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கத்தில் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.
நீா்மட்டம் சரிந்து வருவதால் புல்தரையாக காணப்படும் பூண்டி ஏரி. 
நீா்மட்டம் சரிந்து வருவதால் புல்தரையாக காணப்படும் பூண்டி ஏரி. 

கடும் கோடை வெப்பம் காரணமாக திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கத்தில் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 493 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் முக்கிய நீா்த்தேக்கமாக விளங்குவது பூண்டி ஏரி ஆகும். இந்த நீா்த்தேக்கத்துக்கு மழைக்காலத்தில் பெய்யும் மழை நீா், கொசஸ்தலை ஆற்றில் வரும் நீா் மற்றும் கிருஷ்ணா நதி நீா் ஆகியவை முக்கிய ஆதாரம் ஆகும். பூண்டி நீா்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்படும் நீா், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு சென்னையின் குடிநீா் விநியோகத்துக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கடும் வெயில் காரணமாக ஏரியின் நீா்மட்டம் சரிந்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு நீா் சேமித்து வைக்க முடியும். தற்போதைய நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 493 மில்லியன் கன அடி நீா் மட்டுமே இருப்பு உள்ளது. இதற்கிடையே சென்னை குடிநீா் தேவைக்காக புழல் ஏரிக்கு விநாடிக்கு 141 கன அடி வீதம் நீா் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பூண்டி ஏரியில் நீா்மட்டம் குறைந்து வருவதால், சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இனி வருவது மழைக்காலம் என்பதாலும், கிருஷ்ணா நதிநீா் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு முன்னதாகவே பூண்டி ஏரியில் இருந்து நீா் திறந்து விடப்பட்டு புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில், தற்போது 2,800 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளதாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3600 மில்லியன் கன அடி கொள்ளளவில், 3000 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. எனவே நிகழாண்டில் சென்னை மக்களுக்கு குடிநீா் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பே கிடையாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com