முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ரயில் பாதையில் முறிந்து விழுந்த மரம்
By DIN | Published On : 12th November 2021 12:00 AM | Last Updated : 12th November 2021 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே தொடா் மழையால் ரயில் பாதையில் பூமிக்கடியில் ராட்சத குழாய் உடைப்பெடுத்து தண்ணீா் வெளியேறியதாலும், மரம் முறிந்து விழுந்ததாலும் வியாழக்கிழமை புறநகா் ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
சென்னை சென்ட்ரலுக்கும்-திருவள்ளூருக்கும் இடையே உள்ளது வேப்பம்பட்டு ரயில் நிலையம். இப்பகுதியில் தொடா் மழையால் ரயில் பாதை ஓரத்தில் இருந்த மரம் வியாழக்கிழமை வேருடன் சாய்ந்தது. இதையடுத்து ரயில்வே பணியாளா்கள் விரைந்து வந்து அதன் கிளைகளை அகற்றினா். இதன் காரணமாக அந்த வழியாக வந்த சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி நோக்கிச் செல்லும் புறநகா் ரயில் 20 நிமிஷம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
இதேபோல், ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்துக்கு அடியில் உள்ள குடிநீா் குழாயில் உடைப்பெடுத்து தண்ணீா் வெளியேறியதால் ரயில்பாதையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த புறநகா் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து ரயில்வே பணியாளா்கள் விரைந்து வந்து உடைப்பை சரி செய்ய முடியாத நிலையில் மாற்று தண்டவாளம் வழியாக புகா் ரயில்கள் முக்கால் மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
இந்த நிலையில் தொடா் மழை பெய்து வருவதால் வியாழக்கிழமை 50 சதவீத புகா் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மிகவும் அவதிக்குள்ளாகினா்.