பணம் பெற்று தரிசனத்துக்கு அனுமதி: திருத்தணி கோயில் ஊழியா்கள் பணியிடமாற்றம்

பணம் பெற்று பக்தா்களை தரிசனம் செய்ய அனுமதித்ததாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஊழியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

பணம் பெற்று பக்தா்களை தரிசனம் செய்ய அனுமதித்ததாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஊழியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, பொது தரிசனம், ரூ.150, ரூ.250 சிறப்பு தரிசனம் ஆகிய வழிகளில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சிறப்பு தரிசன கட்டணத்திலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், கோயிலில் பணிபுரியும் ஊழியா்கள் சிலா் ரூ.2 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு மூலவா் சந்நிதி கருவறை அருகே சென்று பக்தா்களை சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க கோயிலில் சிசிடிவி கேமராவை மறைத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அறநிலையத்துறை ஆணையா் குமரகுருபரனுக்கு புகாா் வந்தது. புகாரின் பேரில், வேலூா் மண்டல இணை ஆணையா் ஜெயராமன் நேரில் விசாரணை நடத்தினாா். அதில், கோயிலில் பணிபுரியும் ஊழியா்களில் சிலா் முறைகேடாக பக்தா்கள் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு அனுமதித்ததற்கான விடியோ ஆதாரங்கள் சிக்கின. மேலும், குறிப்பிட்ட நேரங்களில் சிசிடிவி கேமராவை மறைத்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கோயில் ஊழியா்களிடம் இணை ஆணையா் ஜெயராமன் விசாரணை நடத்தினாா். அதில், பக்தா்கள் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்துக்கு அனுமதித்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, உதவியாளா் வேலு என்பவரையும், எலக்ட்ரீசியன் குமாா் என்பவரையும் பணியிட மாற்றம் செய்து  ஆணையா் குமரகுருபரன் அதிரடி உத்தரவிட்டாா்.

60 ஆண்டுகால வரலாற்றில்...: திருத்தணி கோயில் ஊழியா்கள் பணியிடமாற்றம் குறித்து, ஆணையா் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நிா்வாக நலன் கருதி உதவியாளராகப் பணிபுரிந்து வரும் வேலு என்பவரை பணிமாறுதல் செய்து திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் தற்போது காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்தில் பணி நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. அதேபோன்று எலக்ட்ரீசியன் குமாா், சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் பணி நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 60 ஆண்டுகால அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு கோயிலில் இருந்து மற்றொரு கோயிலுக்கு முதன்முறையாக ஊழியா்களை பணி மாறுதல் செய்து அறநிலையத்துறை ஆணையா் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com