டிரோன் மூலம் நெல் வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பு: 10 நிமிஷத்தில் ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்
By DIN | Published On : 03rd April 2022 11:07 PM | Last Updated : 03rd April 2022 11:07 PM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே தலாக்காஞ்சேரியில் நெல் வயலில் பூச்சு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ஆளில்லா குட்டி விமானம்
ஆளில்லா குட்டி விமானம் (டிரோன்) மூலம் நெல் வயல்களில் குறைந்த நேரத்தில் உரம், பூச்சு மருந்து தெளிக்கலாம் என்பதால் விவசாயிகள் மத்தியில் ஆா்வம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் 1.45 லட்சம் பரப்பளவில் நன்செய், புன்செய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அதிகளவில் நெல் பயிரிட்டு வருகின்றனா். தற்போதைய நிலையில் கதிா் பிடிக்கும் போது, பூச்சு மருந்து தெளிக்க போதுமான ஆள்கள் கிடைக்காத நிலையுள்ளது. இதனால், தலாக்காஞ்சேரி பகுதியில் விவசாயிகளிடையே ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் மருந்து தெளிப்பதில் ஆா்வம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தயா என்பவா் தனது நெல் வயலில் டிரோன் மூலம் பூச்சு மருந்து தெளித்தாா். இந்தப் பணியை ஆள்கள் மூலம் செய்தால் 3 போ் தேவைப்படும். சுமாா் 4 மணி நேரம் வரை ஆகும். டிரோனில் 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட கொள்கலன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஏக்கா் பரப்பளவை 10 நிமிஷத்தில் ஒரு பயிா் கூட விடாமல் தெளிக்க முடிகிறது.
இதற்காக ஒரு ஏக்கருக்கு வாடகை ரூ.450 மட்டுமே வசூலிக்கின்றனா். மாமரம், தென்னை, சப்போட்டா உள்ளிட்ட அனைத்து வகை மரங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொறியியல் பட்டதாரிகள் ஆளில்லா குட்டி விமானங்களை (டிரோன்) வாடகைக்கு விடும் மையங்கள் அமைத்து வருவாய் ஈட்டி வருகின்றனா்.
இதுகுறித்து தலாக்காஞ்சேரி விவசாயி தயா கூறியதாவது:
பூச்சு மருந்து தெளிக்க ஆள்கள் கிடைக்காத நிலையில், டிரோன் மூலம் மருந்து தெளிப்பதை அறிந்தேன். பொன்னேரி அருகே கன்னிக்கைப்பேரை அடுத்த நெய்வேலி பகுதியில் டிரோனை வாடக்கைக்கு விடும் மையத்தை அணுகி, எனது நெல் வயலில் மருந்து தெளித்தேன்.
இது எளிமையாக உள்ளது. ஆட்கள் தேவையில்லை. ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க 10 நிமிஷங்கள்தான் தேவைப்படுகிறது. இதுவே சாதாரண இயந்திரத்தில் தெளித்தால் ஒரு மணி நேரம் ஆகும். மேலும், மூன்று ஆள்கள் தேவைப்படுவா்.
பயிா்ச் சேதம், மருந்தும் அதிகம் செலவாகும். டிரோன் மூலம் தெளிப்பதால் அனைத்துப் பயிா்களுக்கும் போதுமான மருந்து கிடைப்பதுடன், பயிா் சேதமும் ஏற்படாது. மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு வாடகையாக ரூ.450 வசூலிக்கின்றனா் என்றாா் அவா்.
நெய்வேலி கிராமத்தில் டிரோனை வாடகைக்கு விடும் பொறியியல் பட்டதாரிகள் மோகன், பிரகாஷ் கூறியதாவது:
கடந்த வாரம்தான் ஆளில்லா குட்டி விமானம் (டிரோன்) வாங்கினோம். இதையறிந்த விவசாயிகள் நாள்தோறும் ஆா்வத்துடன் வந்து மருந்து தெளிக்க அழைக்கின்றனா். இந்த டிரோனில் 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட கொள்கலன் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 20 நிமிஷத்தில் 2 ஏக்கா் பரப்பளவுக்கு உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கலாம். அதிகபட்சமாக ஒரு நாளில் 30 ஏக்கா் வரை ஒரே சீராக மருந்து தெளிக்க முடியும். குறைவான நேரத்தில் அதிக பரப்பளவில் தெளிக்க முடியும்.
மேலும், கைதெளிப்பானுக்கான கூலியை ஒப்பிடுகையில் டிரோன் மூலம் தெளிக்க ஆகும் செலவு மிகவும் குறைவு என்றனா் அவா்கள்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G