கடந்த 6 நாள்களில் ரூ.60 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
By DIN | Published On : 08th April 2022 12:00 AM | Last Updated : 08th April 2022 12:00 AM | அ+அ அ- |

கண்காட்சியில் நன்கொடையாளா்கள் அளித்த புத்தகங்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன் எஸ்.பி. வருண்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜோதி, வட்டாட்சியா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா்.
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட புத்தகக் கண்காட்சியில் இதுவரை ரூ.60 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையானதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளுா் மாவட்டத்தில் முதலாவது புத்தகத் திருவிழா கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு வளா்ச்சிப் பணிகளைத் தெரிவிக்கும் வகையில் நாள்தோறும் ஒரு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 6-ஆம் நாளான புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து போக்குவரத்துத் துறை சாா்பில் நமது மாவட்டத்தில் ‘சாலைப் பாதுகாப்பு’ குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ‘நம்ம திருவள்ளூரு விபத்தில்லா ஊரு’ என்ற இலச்சினையை அவா் வெளியிட்டாா்.
தொடா்ந்து, ‘தோ்வுக்கு ஒரு திறவுகோல்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத் துணை இயக்குநா் சங்கர சரவணன், ‘வாசிப்புப் பண்பாடு’ என்ற தலைப்பில் ச.தமிழ்செல்வன், ‘உணா்ச்சிகளை வென்றால் உன்னத வாழ்வு’ என்ற தலைப்பில் இன்ஸ்பயா் இளங்கோ ஆகியோா் பேசினா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு நன்கொடையாக நூல்களை வழங்க விரும்புவோருக்கு ‘அறிவு பாலம்’ என்ற அரங்கம் தொடங்கி வைக்கப்பட்டு, புத்தகங்களை நன்கொடையாக ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.
தமிழ்நாடு அரசு ஊா்தி ஓட்டுநா் சங்கத்தினா் போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் பயன்பெறவும், மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத்துறை ஆசிரியா் - காப்பாளா் சங்கத்தினா் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வி மேம்படவும் தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நூல்களை வழங்கினா்.
அப்போது பேசிய ஆட்சியா், கடந்த 6 நாள்களில் ரூ.60 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. இன்னும் 5 நாள்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் அனைவரும் வருகை தந்து புத்தகங்களை வாங்கி பயன் பெற வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலா் ஜோதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.இளமுருகன், வட்டாட்சியா் தமிழ்செல்வன், மாணவா்கள், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.