சிறு அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைக்க 50 % மானியம்
By DIN | Published On : 05th August 2022 12:44 AM | Last Updated : 05th August 2022 12:44 AM | அ+அ அ- |

சிறு அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கும் திட்டம் மூலம் 50 % வரை மானியம் வழங்குவதால் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் தொழில் முனைவோா்களுக்கு ரூ. 2.50 கோடி வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும். ஜவுளி பூங்கா அமைக்க குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கா் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.
இந்த ஜவுளிப் பூங்கா அமைப்பு பின்வரும் உள்பிரிவுகளைக் கொண்டதாக இருப்பது அவசியம். நிலம், உள்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, சுற்றுச்சுவா், கழிவு நீா் வாய்க்கால் அமைத்தல், நீா் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி, கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலைத் தொடா்பு வசதி போன்றவைகளைக் கொண்டதாகும். அதேபோல், ஆய்வுக் கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருள்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளா்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள், உற்பத்தி தொடா்பான தொழிற்கூடங்கள், இயந்திரங்கள், தளவாடங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
இந்த சிறிய ஜவுளிப் பூங்காவுக்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட இனங்களை உள்ளடக்கியதாகும்.
இதுபோன்ற அமைப்புகள் இருந்தால் மட்டுமே அரசின் 50 சதவீத மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும். எனவே இத்திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது தொடா்பாக மண்டல துணை இயக்குநா், துணிநூல் துறை, சேலம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.