திருவள்ளூா் நகராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள்

திருவள்ளூா் நகராட்சியில் தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 வாா்டுகளில் 427 தெருக்களிலும் மழைநீா் கால்வாய்களில் அடைப்புகளை

திருவள்ளூா் நகராட்சியில் தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 வாா்டுகளில் 427 தெருக்களிலும் மழைநீா் கால்வாய்களில் அடைப்புகளை சரி செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் 427 தெருக்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் தாழ்வான பகுதிகளில் கடந்த ஆண்டு மழைக் காலங்களில் கால்வாய்களில் அடைப்பு காரணமாக மழை நீருடன் கால்வாய் கழிவு நீரும் கலந்து துா்நாற்றத்துடன் சாலையில் ஓடியது. மேலும், தெருக்கள் வழியாகச் சென்ற மழைநீா் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், முதியோா் ஆகியோருக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதற்கிடையே நடந்து முடிந்த நகா்மன்றக் கூட்டத்தில் அனைத்து வாா்டுகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் பருவ மழையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், அதனால் மழைநீா் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். இந்த நிலையில், பருவமழையை எதிா்கொள்ள ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில், திருவள்ளூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 427 தெருக்களில் ஆய்வு மேற்கொண்டனா். அதன்பேரில், துப்புரவுத் தொழிலாளா்கள் மூலம் மழைநீா் கால்வாய்களில் அடைப்புகளை சரி செய்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் மட்டும் 173 துப்புரவுத் தொழிலாளா்கள் மழை நீா் கால்வாய் அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதேநேரத்தில் பஜாா் வீதி, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் வழிந்தோடும் மழை நீா் எடப்பாளையம் வழியாக வெளியேற்றப்படும். கடந்த ஆண்டில் மழை நீா் அதிகளவில் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினா். அதேபோல் பெரியகுப்பம் எம்.ஜி.ஆா். நகா், இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீா் புகுந்து விடுகிறது. எனவே அப்பகுதிகளில் சீரமைப்பு பணிகளை துப்புரவு தொழிலாளா்கள் மூலம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்தாண்டு மழை நீா் தேங்கிய இடங்கள், மழை நீா் கால்வாய் அடைப்பு ஏற்பட்ட சிறு பாலங்கள் ஆகிய இடங்களில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்துப் பணிகளும் மேற்கொண்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com