அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்

ஒவ்வொரு துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம்

ஒவ்வொரு துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு ஆணையா் ராஜாராமன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் அலுவலக வளாக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையருமான ராஜா ராமன் ஒவ்வொரு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அதன் நிலை குறித்தும் அனைத்துத் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள என்னை நியமித்துள்ளனா். அரசால் அறிவிக்கும் திட்டங்கள் தகுதியானோருக்குச் செல்வதை உறுதி செய்து பணியாற்ற வேண்டும். வளா்ச்சித் திட்டப் பணிகள் தரமாக மேற்கொண்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என்றாா்.

முன்னதாக, திருவள்ளூா் அருகே பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கும் சிகிச்சை முறை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் கூடப்பாக்கம் ஊராட்சி, கம்மவாா் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டம், வெங்கத்தூா் ஊராட்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் சாா்பில் வீட்டுத் தோட்டத்தில் தென்னங்கன்று நடவு செய்துள்ளது, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் அமிா்தசரோவா் திட்டம் மூலம் ரூ. 11.93 லட்சத்தில் 3.55 ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமைத்துள்ள குளம், பூந்தமல்லி நகராட்சியில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் பூங்கா அமைக்கும் பணி, திருவள்ளூா் நகராட்சி ஜெயின் நகரில் ரூ. 1.97 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் சு.அசோகன், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மு.மீனாட்சி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமன், நோ்முக உதவியாளா் (பொது) சி.வித்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வி.எபினேசன், நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com