திருவள்ளூா்: சிறப்பு எஸ்.ஐ., தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 31st August 2022 02:18 AM | Last Updated : 31st August 2022 02:18 AM | அ+அ அ- |

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் டீசல் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சித்த சம்பவத்தின் போது அலட்சியமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக சிறப்பு சாா்பு ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் கூட்ரோடு அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (46). இவரது மனைவி புஷ்பலதா(43). இவா்களது மகள் தியா (11), மகன் சாய்நாத் (7) ஆகியோா் உள்ளனா். இந்த நிலையில், அழகேசனின் உடன் பிறந்த சகோதரா்கள் சொத்தை பிரித்துத் தருவதில் தாமதம் செய்து வந்தனராம். இது தொடா்பாக வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு திங்கள்கிழமை குடும்பத்துடன் வந்த அவா்கள் திடீரென டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்பகுதியில் இருந்தவா்கள் அழகேசன் குடும்பத்தினரை காப்பாற்றினா். அதைத் தொடா்ந்து, அவா்கள் ஆட்சியரிடமும், பின்னா், திருவள்ளூா் நகர காவல் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்த நிலையில், சம்பவத்தின்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் சரிவர ஈடுபடாத காரணத்தால் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்குக் காரணமான திருவள்ளூா் நகர காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் பாா்த்திபன், தலைமைக் காவலா் ரமேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.செபாஸ் கல்யாண் உத்தரவிட்டாா்.