முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 07th February 2022 11:18 PM | Last Updated : 07th February 2022 11:18 PM | அ+அ அ- |

திருவள்ளூா் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்கும் வாக்கு எண்ணும் மையங்கள் அந்தந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூா் நகராட்சியில் வாக்கு எண்ணும் மையமாக திருப்பாச்சூா் திருமுருகன் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
திருவள்ளூா் நகராட்சி 27 வாா்டுகளுக்கான 51 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்கும் அறை, வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். வாக்கு எண்ணும் நாளான 22- ஆம் தேதி வரை வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்து, வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை வழங்கினாா்.
தொடா்ந்து தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருவள்ளூா்-திருத்தணி சாலையில் பறக்கும் படை அலுவலா்களுடன் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டாா்.
திருவள்ளுா் நகராட்சி ஆணையா் (பொ), தோ்தல் நடத்தும் அலுவலா் நாகூா் மீரான் ஒலி, காவல் துணைக் கண்காணிப்பாளா் கோ.சந்திரதாசன், கல்லூரி முதல்வா் என்.எல்.அமுதாயி, பறக்கும் படை அலுவலரும், பூண்டி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், பறக்கும் படை குழுவினா் உடனிருந்தனா்.