வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற பிப். 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th January 2022 01:45 AM | Last Updated : 10th January 2022 01:45 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்கள் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற பிப். 28-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகையை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞா்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓராண்டும் போதுமானது.
இந்த உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு முகவரியான இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதையடுத்து, பூா்த்தி செய்து கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அலுவலா் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நீங்கலாக) பெற்று வரும் பிப். 28-க்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், கல்விச் சான்றிதழ் மற்றும் நகல்களுடன் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் அளித்து பயன்பெறலாம்.