ஆவடி மாநகராட்சி பள்ளியில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு
By DIN | Published On : 16th June 2022 03:46 AM | Last Updated : 16th June 2022 03:46 AM | அ+அ அ- |

ஆவடி, காமராஜர் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆவடி, காமராஜர் நகர், 6-ஆவது தெருவில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 15 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 570 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என பொதுமக்கள் சார்பில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை அமைச்சர் சா.மு.நாசர், பள்ளிக்குத் திடீரென சென்றார். வகுப்பறைகள், கழிப்பறை, சத்துணவுக் கூடம், ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவேடு, பள்ளி வளாகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆசிரியர்கள், மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரவும், கழிப்பறைகளைப் பராமரிக்கவும், சத்துணவுக் கூடத்தைச் சீரமைக்கவும், அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைச் சீரமைக்கவும், ஆழ்துளை கிணற்றைப் பராமரிக்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்திடம் கூறி பள்ளிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
உடனடியாக ஆவடி மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் ஜெயக்குமார் தலைமையில் ஊழியர்கள் பள்ளிக்கு வந்து அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக திட்ட மதிப்பீடு செய்தனர்.
ஆய்வின் போது, ஆவடி மாநகராட்சி 38-ஆவது வார்டு உறுப்பினர் மேகலா சீனிவாசன், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.