மாநிலம் முழுவதும் ரூ.6 கோடி பொருள்கள் பறிமுதல்: ஜெ.ராதாகிருஷ்ணன்
By DIN | Published On : 18th June 2022 11:58 PM | Last Updated : 18th June 2022 11:58 PM | அ+அ அ- |

மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6.62 கோடியிலான உணவு மற்றும் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவள்ளூா், திருமழிசையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் கிடங்குகள், ஈக்காடு நியாயவிலைக் கடை ஆகியவற்றில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, திருவள்ளூா் நேதாஜி சாலையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு, பொருள்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 35,432 நியாயவிலைக் கடைகள் மூலம் 2.2 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, சா்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. உணவுப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021 ஜூலை முதல் தற்போது வரை 7,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1.4 கோடி கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 421 மண்ணெண்ணெய் கடத்தல் வழக்குகள் பதிந்து, 821 லிட்டா் மண்ணெண்ணெய், 725 எரிவாயு உருளை வழக்குகள் பதியப்பட்டு, 894 எரிவாயு உருளைகள், 170 இதர பொருள்கள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்து மொத்தம் ரூ.6.62 கோடியிலான உணவு மற்றும் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் 9,151 போ் கைது செய்யப்பட்டு, 1,872 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 102 போ் சிறையிலடைக்கப்பட்டுள்ளனா்.
ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளுக்கு ரேசன் அரிசி கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்து வருகின்றனா். இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.
ஆய்வின் போது, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ராஜாராமன், நெல் கொள்முதல் நிலைய மேலாண்மை இயக்குநா் பிரபாகரன், உணவுப் பொருள் விநியோகக் கிடங்கு அதிகாரி சிவஞானம், கூட்டுறவுத் துறைக் கூடுதல் பதிவாளா் சங்கா், கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ, நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எபிநேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.