முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

திருத்தணி முருகன் கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
விழாவில் நூற்றுக்கணக்கானோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா். திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான, பிரம்மோற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, தினசரி உற்சவா் முருகப் பெருமான், கேடயம், பல்லக்கு, அன்னம், வெள்ளி மயில், யானை, சிம்மம், சந்திரபிரபை போன்ற பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் மாடவீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இந்த நிலையில், ஏழாம் நாளான புதன்கிழமை இரவு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மரத்தேரில் எழுந்தருளினாா். பின்னா் அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனா். வியாழக்கிழமை (மே 12) இரவு 8.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் தெய்வானையம்மை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் துணை ஆணையா் விஜயா மற்றும் கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.