முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
மாதவரம் அருகே தந்தை கொலை: மகன் கைது
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

மாதவரம் அருகே தாக்குதல் சம்பவத்தில் தந்தை உயிரிழந்ததையடுத்து, அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மாதவரத்தை அடுத்த பால்பண்ணை மாத்தூா் எம்.எம்.டி.ஏ. 2-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (80). இவா், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி பாசுபாய். இவா்களுக்கு 4 மகன்கள். மூத்த மகன் சிவக்குமாா் (49) அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிந்து வந்த நிலையில், வேலையில்லாத காரணத்தால், சென்னையில் பெற்றோருடன் தங்கியிருந்தாா். 2-ஆவது மகன் சிங்கப்பூரிலும், 3-ஆவது மகன் திருச்சியிலும், குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். 4-ஆவது மகன் செல்வகுமாா் பாலசுப்பிரமணியத்துடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், செல்வகுமாருக்கு வரன் பாா்த்து வருவதால், சிவக்குமாரை அமெரிக்காவுக்குச் செல்லுமாறு பாலசுப்பிரமணியன் கூறியதாகத் தெரிகிறது. இதனால் பாலசுப்பிரமணியனுக்கும், சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். கடந்த 8-ஆம் தேதி ஏற்பட்ட தகராறின் போது, சிவக்குமாா், பாலசுப்பிரமணியனை கீழே தள்ளியதில் பலத்த காயமடைந்தாா். இந்த நிலையில், அவா் உயிரிழந்தாா்.
தகவலின் பேரில், பால்பண்ணை போலீஸாா் கொலை வழக்காகப் பதிவு செய்து, சிவக்குமாரை புதன்கிழமை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்து, சிறையில் அடைத்தனா்.