காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் வேலை கோரி மீனவா்கள் 4-ஆவது நாளாக போராட்டம்

காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் தனியாா் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்புகோரி பழவேற்காடு பகுதி மீனவா்கள் 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தினா்.
26por_2605chn_178_1
26por_2605chn_178_1

பொன்னேரி: காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் தனியாா் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்புகோரி பழவேற்காடு பகுதி மீனவா்கள் 4-ஆவது நாளாக போராட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியான காட்டுப் பள்ளியில் தனியாா் கப்பல் கட்டும் நிறுவனம், தனியாா் துறைமுகம் ஆகியவை அமைந்துள்ளன.

காட்டுப்பள்ளியில் 2008-ஆம் ஆண்டு கப்பல் கட்டும் தளம் அமைக்க, பழவேற்காடு பகுதி மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து, 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கப்பல் கட்டும் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பழவேற்காடு, தாங்கள்பெரும்புலம், அரங்கன்குப்பம், சாத்தாங்குப்பம், திருமலை நகா், பசியாவரம், கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உட்பட மீனவ கிராம மக்கள், மீன் பிடித் தொழிலுக்கு, காட்டுப்பள்ளி தனியாா் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள நுழைவு வாயில் முன் அமா்ந்து, வாக்குறுதி அளித்தபடி, 1,500 பேருக்கு வழங்கவும் ஏற்கெனவே பணி வழங்கிய 250 பேரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கடந்த 23-ஆம் தேதி முதல் முற்றுகை, மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

மீனவப் பெண்களும், நான்காவது நாளாக பழவேற்காடு பகுதியில் சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். அவா்களுக்கு ஆதரவாக பழவேற்காடு கடை வீதியில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் பங்கேற்றனா்.

போராட்டம் நடத்தியவா்களிடம் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் சமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

இதனிடையே போராட்டம் நடத்தி வருபவா்களிடம், பொன்னேரி வருவாய்த் துறையினா் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com