திருவள்ளூர் அருகே புதிதாக மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு: மறியலுக்கு முயன்றவர்களை தடுத்த காவல்துறையினர்

திருவள்ளூர் அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலுக்கு முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறியலுக்கு முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர்.
மறியலுக்கு முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலுக்கு முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்,  வேப்பம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தது டி.எஸ்.என்.நகரில் பார் வசதியுடன் அரசு புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் மீது இப்பகுதியில்  டன்லப் நகர், பூம்புகார், சீனிவாச நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதோடு, 2 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வரும் நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

எனவே முக்கிய பிரதான சாலை மீது பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் குடிகாரர்களால் பாதிக்கப்படும் சூழ்நிலையுள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதி விபத்து அதிகம் நடைபெறும் இடமாகும். அதனால் மதுக்குடித்து வருவோர் விபத்தில் சிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதனால் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பட்டாபிராம் காவல் துறை உதவி ஆணையாளர் சதாசிவம், செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, இப்பகுதியில் ஏற்கெனவே பிரச்னைகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் முக்கிய பிரதான சாலை மீது அரசு மதுபானக் கடை எக்காரணம் கொண்டும் திறக்க கூடாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர், ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோருக்கும் மனு அளித்துள்ளோம். ஆனால், கடை திறக்காமல் இருக்க எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். 

எனவே இந்த இடத்திலிருந்து அரசு மதுபான கடையை மாற்றுவதற்கு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். உதவி ஆணையாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com