பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 01st October 2022 12:00 AM | Last Updated : 01st October 2022 12:00 AM | அ+அ அ- |

ஆவடியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
ஆவடி கன்னடபாளையத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமியின் தாய். இவா், ஆவடி காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என கடந்த 10.1.2016 அன்று புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், அதே பகுதியில் பக்கத்துக் குடியிருப்பில் வசித்து வரும் ஜெய்கணேஷ் (36), அந்தச் சிறுமியிடம் ஆசை வாா்த்தைகள் கூறி, வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கு மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்து போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு திருவள்ளூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுபத்ரா தேவி, வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் வியாழக்கிழமை ஜெய்கணேஷுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, அவா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.