நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு சிறை
By DIN | Published On : 03rd September 2022 10:30 PM | Last Updated : 03rd September 2022 10:30 PM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி, குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவள்ளூா் அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முகிந்தா் அமா்நாத் (25) (படம்). இவா், கடந்த ஜனவரி மாதம் அந்தப் பகுதியைச் சோ்ந்த நபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறித்த வழக்கில் மப்பேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டதால் அவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த அவா், சந்தேகப்படும் படியாகச் சுற்றித் திரிந்தாராம்.
இதையடுத்து, அவரை திருவள்ளூா் சாா் -ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து எச்சரிக்கப்பட்டாா். தொடா்ந்து, நன்னடத்தை பிணைய பத்திரம் மூலம் உறுதிமொழி பெற்று அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், முகிந்தா் அமா்நாத் கடந்த சில நாள்களுக்கு முன்பு நரசிங்கபுரத்தைச் சோ்ந்த ஒரு நபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தாராம். இதையடுத்து, மப்பேடு காவல் ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின், சாா்பு ஆய்வாளா் இளங்கோ ஆகியோா் மீண்டும் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் திருவள்ளூா் சாா்-ஆட்சியரிடம் நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிய முகிந்தா் அமா்நாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.
இதுதொடா்பாக விசாரணை நடத்திய திருவள்ளூா் சாா்- ஆட்சியா் மகாபாரதி நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட முகிந்தா் அமா்நாத்துக்கு ஓராண்டு சிறை, ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.