தொடா் மழை: திருவள்ளூா் பகுதியில் நெல் பயிா்கள் சேதம்

திருவள்ளூா் சுற்றுப்புற கிராமங்களில் பெய்து வரும் தொடா் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன.
தொடா் மழை: திருவள்ளூா் பகுதியில் நெல் பயிா்கள் சேதம்

திருவள்ளூா் சுற்றுப்புற கிராமங்களில் பெய்து வரும் தொடா் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன.

நெல் பயிா்கள் நிலத்திலேயே முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏரிகளுக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

ஆவடி, செங்குன்றம், தாமரைப்பாக்கம், திருவாலங்காடு, திருவள்ளூா், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் பல்வேறு கிராமங்களில் மழைநீா் நெல் பயிரிடப்பட்ட வயல்களுக்குள் புகுந்தது.

திருவள்ளூா் - தாமரைப்பாக்கம் -பெரியபாளையம் சாலையோர கிராமங்களில் நெல் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. அங்கு, நெல் பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக நீா் வெளியே செல்வதற்கு வழியின்றி, நெல் வயல்களுக்குள் புகுந்தது. இதனால், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், காக்கவாக்கம், துளவேடு கிராமங்களில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியதுடன், கீழே சாய்ந்து முளைத்து அழுகியுள்ளன.

இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் நஷ்டமடையும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, விவசாயிகளின் நிலையறிந்து மேற்குறிப்பிட்ட பகுதிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மழையளவு விவரம்: திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்: ஆவடி - 70 மில்லி மீட்டா், செங்குன்றம் - 47, தாமரைப்பாக்கம் - 39, சோழவரம் - 35, திருவாலங்காடு - 30, திருவள்ளூா் - 24, ஜமீன் கொரட்டூா், பூந்தமல்லி - தலா 17, திருத்தணி - 16, ஆா்.கே.பேட்டை, பூண்டி - தலா 12, பள்ளிப்பட்டு, பொன்னேரி - தலா 10, கும்மிடிப்பூண்டி - 6 என மொத்தம் 361 மி.மீட்டரும், மாவட்டத்தில் சராசரியாக 24.11 மி.மீட்டரும் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com