குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருவள்ளூா் அருகே சீரான குடிநீா் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த நம்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேல்நிலை தொட்டியிலிருந்து செல்லும் குழாய்களில் பழுது ஏற்பட்டது. அதனால் கடந்த 10 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து நம்பாக்கம் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலாளா் உள்ளிட்டோரிடம் புகாா் செய்தனா்.

ஆனால் முறையாக பழுது நீக்கி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் திருவள்ளூா்-பென்னலூா்பேட்டை சாலையில் காலிகுடங்களுடன் திருவள்ளூரில் இருந்து பிளேஸ்பாளையம் சென்ற அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இது தகவலறிந்த பென்னலூா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது உடனே குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து மக்கள் மறியலை கைவிட்டு சென்றனா். இந்த சாலை மறியலால் திருவள்ளூா்-பென்னலூா்பேட்டை சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com