இளைஞர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது

திருவேற்காட்டில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருவேற்காடு, சுந்தரசோழபுரம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி சத்யா. இவர்களின் மகன் விஜயகாந்த் (19). கூலித் தொழிலாளி. இதற்கிடையில் வேலாயுதம் சொந்த ஊரான வந்தவாசி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சத்யா, விஜயகாந்த் ஆகியோர் வீட்டில் தூங்கியுள்ளார். நள்ளிரவு வீட்டுக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டு விஜயகாந்த் எழுந்து வந்து, கதவை திறந்து வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த 3 மர்ம நபர்கள் விஜயகாந்தை வெட்டினர். அவரது அலறல் சப்தம் கேட்டு, சத்யா வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து மர்ம நபர்களை தடுத்துள்ளார்.

அப்போது அவர்கள் சத்யாவின் இடது கையை வெட்டியுள்ளனர். இதன் பிறகு, விஜயகாந்தை சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து திருவேற்காடு போலீஸார் வந்து விஜயகாந்த் உடலை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் காயம் அடைந்த சத்யாவையும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர்.

காவல் ஆய்வாளர் விஜய் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே பகுதி, ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (20) என்பவரை விஜயகாந்த் உள்ளிட்டோர் கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விஜயகாந்த் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆரோக்கியசாமி, தனது நண்பர்களான அதே பகுதியைச் விக்னேஷ் (20), சரவணன் (20) ஆகியோர் விஜயகாந்தை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

போலீஸார் தலைமறைவாக இருந்த ஆரோக்கியசாமி, விக்னேஷ், சரவணன் ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்து, அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com