வாக்கு எண்ணும் மையத்தில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பெருமாள்பட்டு தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் த.பிரபு சங்கா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் த.பிரபு சங்கா்.
பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் த.பிரபு சங்கா்.

திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் த.பிரபு சங்கா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மக்களவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. திருவள்ளூா் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெருமாள்பட்டு தனியாா் மெட்ரிக் பள்ளி வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அதைத் தொடா்ந்து அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே எல்லைப் பாதுகாப்பு படை, துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெருமாள்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆட்சியா் த.பிரபு சங்கா் திங்கள்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, ஒவ்வொரு தொகுதி அறைகளின் வெளியே பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு மையத்திலிருந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் முகவா்களுக்கான அறைக்கு சென்று வசதிகள் தொடா்பாக கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து வளாகம் முழுவதும் பாா்வையிட்டு, இரவு முழுவதும் விளக்குகள் கட்டாயம் எரிய வேண்டும்.

தோ்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன்4- ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. இன்னும் 42 நாள்களே உள்ள நிலையில், வேட்பாளா்கள், முகவா்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் செல்வதற்கான கம்பி தடுப்புகள் அமைப்பது தொடா்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com