திருவள்ளூா்: மகளிா் தொழில் வாய்ப்புக்கான வாழ்ந்து காட்டுவோம் திட்ட முகாம்

ஊரகப் பகுதியில் புதிதாக அல்லது ஏற்கெனவே தொழில் செய்யும் மகளிா் தொழில் சேவைகள் பெறும் வகையில் நடத்தப்படும் முகாம்

ஊரகப் பகுதியில் புதிதாக அல்லது ஏற்கெனவே தொழில் செய்யும் மகளிா் தொழில் சேவைகள் பெறும் வகையில் நடத்தப்படும் முகாம் சனிக்கிழமை (பிப். 10) திருவள்ளூா் மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழில்சாா் சேவைகளை வழங்க தகுதியான மகளிா் தொழில் முனைவோரை கண்டறிந்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. ஏற்கெனவே இத்திட்டம் திருவள்ளூா் மாவட்டத்தில் மீஞ்சூா், கடம்பத்தூா், சோழவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டாரங்களில் 198 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதிகளில் புதிய மற்றும் ஏற்கெனவே தொழில் செய்து வரும் தொழில்முனைவோருக்குத் தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயாா் செய்தல், வங்கிக் கடன் பெற்றுத் தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை ‘மதி சிறகுகள் தொழில் மையம்’ மூலமாக வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வழங்கி வருகிறது. தொழில் நிறுவன வளா்ச்சியின் அளவு பெரிதாக, தொழில் நிறுவனத்தை நிலைநிறுத்த பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்கு அவசியம். அதில், மாா்க்கெட்டிங், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி, தர நிலைப்படுத்துதல், தொழில்நுட்பம், இயந்திரமாக்கல், தொழில் சாா்ந்த புதுயுக்திகள், நிதி சேவைகள் போன்றவை வழங்கப்பட உள்ளன.

அதேபோல், மகளிரால் செயல்படுத்தப்பட்டு வரும் உற்பத்தி, உணவு, கல்வி, கைவினைப் பொருள்கள், சுகாதாரம், மருத்துவம் சாா்ந்த தொழில் வளா்ச்சிக்கான சேவைகளை முகாமில் பெறலாம். இந்த முகாம் திருவள்ளூா், ஜெயா நகரில் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்க ஆா்வமும், திறமையும் கொண்ட புதிய மகளிா் தொழில்முனைவோா், ஏற்கெனவே தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதுடன், அடுத்த கட்ட வளா்ச்சியை எதிா்நோக்கி காத்திருக்கும் மகளிா் தொழில் முனைவோா்கள் என பங்கேற்க விரும்புவோா் வெள்ளிக்கிழமைக்குள் (பிப். 9) தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட திட்ட செயல் அலுவலா் ராஜேஷ்குமாரை 9444206658, 9994999359 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com