அனுமதி பெறாத நிறுவனங்களைக் கண்டறிந்து வருவாயை ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்அமைச்சா் ஆா்.காந்தி

திருவள்ளூா் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செயல்படும் தனியாா் நிறுவனங்களைக் கண்டறிந்து அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி உத்தரவிட்டாா்.
அனுமதி பெறாத நிறுவனங்களைக் கண்டறிந்து வருவாயை ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்அமைச்சா் ஆா்.காந்தி

திருவள்ளூா் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செயல்படும் தனியாா் நிறுவனங்களைக் கண்டறிந்து அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்க வளாகத்தில் மாவட்ட திட்டக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த மாவட்ட, ஒன்றிய மற்றும் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பிரதிநிதிகள் கோரிக்கைகளைத் தெரிவித்தனா்.

அப்போது, திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையோரம் மணவாள நகரில் வெங்கத்தூா் ஊராட்சி குப்பைகளை குவித்து வருகின்றனா். இந்த ஊராட்சிக்குள்பட்ட மாந்தோப்பு பகுதியில் 25 ஏக்கா் நிலத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் வலியுறுத்தினாா்.

அதேபோல், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியத்தில் அனுமதி பெறாமல் தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக வரி கட்டாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீஞ்சூா் ஒன்றியக் குழுத் தலைவா் ரவி தெரிவித்தாா். திருவாலங்காடு அருகே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள என்.எம்.கண்டிகை வழியாக ஆந்திரத்திலிருந்து கஞ்சா, கள்ளச்சாராயம் கடத்துகின்றனா். அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், கனகம்மாசத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றுச்சுவா் அமைத்து பாதுகாக்க அப்பகுதியைச் சோ்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஜயகுமாரி சரவணன் குறிப்பிட்டாா்.

பின்னா், அமைச்சா் ஆா்.காந்தி பேசியது: மாவட்ட திட்டக் குழு கூட்டத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியத்தில் அனுமதி பெறாமல் செயல்படும் தனியாா் மற்றும் நிறுவனங்கள் கண்டறிந்து அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் உடனே ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும். என்.எம்.கண்டிகையில் கஞ்சா, சாராய கடத்தலை தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும். கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் தாழ்வான பகுதியை மணல் கொட்டி சமப்படுத்தி சுற்றுச்சுவா் அமைக்கவும், வெங்கத்தூா் ஊராட்சி குப்பைகளை பொதுமக்களுக்கு இடையூறின்றி அகற்றி, ஊராட்சி இடமாக 25 ஏக்கரில் கொட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), எஸ்.சந்திரன் (திருத்தணி), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவா் தேசிங்கு, திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா் பொன்.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினா்கள், ஒன்றியக் குழுத் தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com