திருவாலங்காட்டில் பத்ரகாளியம்மன், விநாயகா் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவாலங்காடு பத்ரகாளியம்மன், வினை தீா்த்த விநாயகா் ஆகிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோயில் விமானம் மீது நன்னீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு. (வலது) விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோயில் விமானம் மீது நன்னீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு. (வலது) விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

திருவாலங்காடு பத்ரகாளியம்மன், வினை தீா்த்த விநாயகா் ஆகிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளுள் முதல் சபையான ரத்தின சபையை உடைய திருவாலங்காடு திருத்தலத்தில் தெற்கு மாடவீதியில் வினை தீா்த்த விநாயகப் பெருமானுக்கும், தேவா்களுக்குத் துன்பம் விளைவித்து வந்த சும்ப நிசும்பா்களை அழித்த பத்ரகாளியம்மனுக்கும் கோயில் அமைக்கப்பெற்று குடமுழுக்கு விழா கடந்த 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து சனிக்கிழமை காலை 2-ஆம் கால யாக சாலை பூஜைகளும், அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு 3-ஆம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்ற. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 4 -ஆம் கால யாக சாலை பூஜை, விசேஷ திரவ்ய ஹோமங்கள், பரிவார மஹா பூா்ணாஹுதி நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு வினைதீா்த்த விநாயகா் கோயில் விமானம், மூலவா் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் விமானம் மற்றும் மூலவா் அம்மனுக்கு நன்னீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதில் திருவாலங்காடு, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூா், சென்னை உள்ளிட்ட ஊா்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

விழாவில் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், கோயில் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன், ஜி.உஷாரவி, கோ.மோகனன், திருவாலங்காடு ஒன்றியக் குழு தலைவா் ஜீவா விஜயராகவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com