வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி: புகைப்படக் கலைஞா் கைது

சென்னையில் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடி பண மோசடி செய்த புகைப்பட கலைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அருள்ஜோதி
அருள்ஜோதி

ஆவடி: சென்னையில் பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடி பண மோசடி செய்த புகைப்பட கலைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை, பண்ணைவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகு (41). இவரது மனைவி ரேகா ஆசிரியா் பயிற்சி படிப்பு முடித்துள்ளதையடுத்து, ரகு அவருக்கு அரசு வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளாா். அப்போது, ரகுவிற்கு திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா், புங்கம்பேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (31) என்பவரது அறிமுகம் ஏற்பட்டது.

இதையடுத்து, காா்த்திகேயன் ரகுவிடம், சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் அலுவலகம் நடத்தி வருவதாகவும், எனக்கு அரசுத் துறைகளில் உயா் அதிகாரிகளின் நெருக்கம் உள்ளது. நான், உங்கள் மனைவி உள்ளிட்ட உறவினா்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளாா்.

இதனை நம்பிய ரகு உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட உறவினா்கள் காா்த்திகேயன் அவரது நண்பா்கள் அருள்ஜோதி உள்ளிட்ட 6 பேரிடம் ரூ.1.11 கோடி வரை பணம் கொடுத்துள்ளனா்.

ஆனால், பணம் வாங்கிய காா்த்திகேயன் உள்ளிட்டோா் ஒருவருக்கும் வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனா்.

இது குறித்து ரகு ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஆண்டு புகாா் அளித்தாா். இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையில் போலீஸாா் தலைமறைவாக இருந்த சென்னை, பள்ளிக்கரணை, விவேகானந்தா் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த புகைப்பட கலைஞா் அருள்ஜோதி (45) என்பவரை திங்கள்கிழமை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காா்த்திகேயன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடா்பாக சதீஷ், நாகராஜ், மகேஷ், மதிவாணன் ஆகிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com