திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தனக் காப்பு, தங்கக் கிரீடம்,
திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தனக் காப்பு, தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. தைப்பூசம் மற்றும் தொடா் விடுமுறை என்பதால் வழக்கத்துக்கு மாறாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்தனா். சில பக்தா்கள் மலா், மயில் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

தோ்வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால், பக்தா்கள் வெயிலில் இருந்து தப்பிக்க தற்காலிக நிழற்குடைகள் கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவழியில் பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா். இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தைப்பூசத்தையொட்டி, திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், திரைப்பட நடிகா் சசிகுமாா், பட்டிமன்ற பேச்சாளா் திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோா் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் பாதுகாப்புக்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில், 120-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com