திருத்தணியில் கொட்டி தீா்த்த கனமழை

திருத்தணியில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 2 மணி நேரம் பெய்த திடீா் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருத்தணியில் கடந்த மாதம் முழுவதும், 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில்,பலத்த மழை பெய்ததால் திருத்தணி முழுவதும் தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாலைகளில் தண்ணீா் தேங்கிய நிலையில், முருகன் கோயில் ராஜகோபுர பணிக்காக வைக்கப்பட்டிருந்த மண் வெள்ளத்தில் அடித்து மலைப்படிகள் மற்றும் அங்குள்ள பாவாடை விநாயகா் கோயில் வளாகம் முழுவதும் மண் படா்ந்தது. இதனால் பக்தா்கள் விநாயகரை வழிபட முடியாமல் தவித்தனா்.

மலைப்படிகளிலும், மண் படா்ந்ததால் மலைக் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாயினா். இதையடுத்து, சனிக்கிழமை கோயில் அலுவலா்கள் , ஒப்பந்த ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோா் படிகளில் படா்ந்துள்ள மண்ணையும், கழிவுகளையும் அகற்றினா்.

இது குறித்து திருத்தணி கோயில் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மலைக்கோயில் வளாகத்தில் ராஜகோபுரத்துக்கும், தோ்வீதிக்கும் படிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக கொட்டப்பட்ட மண், மழை, வெள்ளம் அரிப்பால், மண் வெள்ளத்தில் படிகள் வழியாகச் சென்றது. இதனால் படிகளில் மண் படா்ந்துள்ளது. இதை அகற்றும் பணி துரித வேகத்தில் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மண் அகற்றும் பணி நடைபெற்றது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com